ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி நேற்று இரவு ஹைதராபாத்தில் திரையிடப்பட்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு. மேலும் அப்பெண்ணின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி தயாரிப்பில் மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இன்று (டிச.5) வெளியாகியுள்ளது புஷ்பா 2 திரைப்படம். சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
போலீஸ் லத்தி அடி:
2021-ஆம் ஆண்டு புஷ்பா முதல் பாகம் வெளியாகி வசூல் வேட்டையை செய்த நிலையில், தற்போது புஷ்பா 2-ஆம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு டிக்கெட் முன்பதிவாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நேற்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் ரசிகர்கள் மீது லத்தியால் தடியடி நடத்தினர்.
கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்:
அங்கு குடும்பத்துடன் படம்பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜா(9) இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்ததாகவும், அப்போது, ரசிகர்கள் அங்கும்மிங்கு ஓடியதால் இருவரும் கால்களுக்கு இடையே நசுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பலத்த காயம் காரணமாக இருவரும் சுயநினைவின்றி இருந்துள்ளனர். பின்னர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது, சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில், நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: “Pushpa 3 Rampage” தயாராகும் மூன்றாம் பாகம்; அல்லு அர்ஜுனுடன் நடிக்கிறாரா விஜய் தேவர்கொண்டா?
தற்போது, புஷ்பா 2 படம் பார்க்க குடும்பத்துடன் வந்த நிலையில், கூட்ட நெரிசலில் தாயும், மகனும் சிக்கி தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்துள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சிக்கடப்பள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பலரும் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, தமிழ்நாட்டில் இதேபோன்று கடந்த ஆண்டு துணிவு பட சிறப்புக் காட்சியின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.