டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பல்வேறு தேர்வு மையங்களில் தவறான வினாத் தாள் வழங்கப்பட்டதாக ஆயிரத்து 563 மானவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரியும், முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. மேலும், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் நிலவுவதால் இளங்கலை மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரியும், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோரியும் பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. மேலும், ஆயிரத்து 563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, ஆயிரத்து 563 மாணவர்களின் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, இன்று (ஜூன்.23 ) அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.
மொத்தம் ஆயிரத்து 563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், அதில் 819 பேர் மட்டுமே தேர்வெழுத வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 750 மாணவர்கள் வரை தேர்வு எழுத வரவில்லை என தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை நீட் தேர்வில் நியாயமற்ற வகையில் முறைகேடு செய்ததாக 110 மாணவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இளங்கலை நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாக சர்ச்சை வெடித்ததை அடுத்து கடந்த வாரம் நடைபெற்ற பேரசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வு ரத்து செய்யபப்ட்டது. மேலும், இன்று (ஜூன்.23) நாடு முழுவதும் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் ஜூலை 8ஆம் தேதிக்குள் அதுகுறித்து விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு முறைகேடு: சிபிஐ வழக்குப்பதிவு! எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன? - NEET UG Paper Leak Case To CBI