ஜிந்த்: ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் இருந்து, ராஜஸ்தானின் கோகமேடிக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு பயணிகள் வேன் ஒன்று நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் சுமார் 15 பேர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், வேன் நேற்று நள்ளிரவில் ஹிஸார் - சண்டிகர் நெடுஞ்சாலையில் பிதாரனா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று வேனின் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன், அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
நள்ளிரவு என்பதால், ஒரு சில வாகனங்களே அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்தன. அதில் சில வாகன ஓட்டிகள் விபத்தைக் கண்டதும், பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், பயணிகள் அனைவரும் வேனுக்கு அடியில் சிக்கியிருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
இதனிடையே, தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த வேன் பயணிகளை மீட்டு உடனடியாக நர்வானா சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, வேனில் பயணித்த 15 பேரில் எட்டு பேர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஜிந்த் போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், உயிரிழந்த எட்டு பேரில் ஒருவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை என்றும் கூறினர். மேலும், லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது