டெல்லி: கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி கரோனா உச்சத்தில் நேரத்தில் பிஎம் கேர்ஸ் திட்டம் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களது 23 வயது வரை தேவையான உதவிகளை வழங்கும் பொருட்டு பிஎம் கேர்ஸ் குழந்தைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது.
2020ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் 2023 மே 5ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்கும் அல்லது அவர்களது சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎம் கேர்ஸ் குழந்தைகள் திட்டத்தில் பொருளாதார உதவி கோரி விண்ணப்பிக்கும் 51 சதவீத குழந்தைகளின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 613 மாவட்டங்களில் இருந்து 9 ஆயிரத்து 331 விண்ணப்பங்கள் பிஎம் கேர்ஸ் குழந்தைகள் திட்டத்தின் மூலம் பொருளாதார உதவி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அதில், 4 ஆயிரத்து 532 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 4 ஆயிரத்து 781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் 18 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு வளர்ச்சி அமைச்சகம் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன்! நீதிமன்றம் உத்தரவு! - Gauri Lankesh Murder Case