அகமதாபாத்: பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபர் கடந்த 11 நாட்களில் 5 பெண்களை கொலை செய்திருப்பதாக கூறியிருப்பது மனதை சில்லிடச்செய்யும் செய்தியாக உள்ளது.
இது குறித்து பேசிய குஜராத் போலீசார், "ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியை சேர்ந்த போலு கர்மவீர் ஈஸ்வர் ஜாட் என்கிற ராகுல் ஜாட் என்ற 29 வயது இளைஞர் கடந்த 11 தினங்களில் ஐந்து பேரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். குஜராத் மாநிலம் மோதிவாடா பகுதியில் 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டபோதுதான் ராகுல் குறித்து எங்களுக்கு தெரியவந்தது. இவர் ஒரு மாற்று திறனாளி. மேற்கு வங்கம், கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் ஐந்து பெண்களை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்," என்று கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ள ராகுல் ஐந்து வயது குழந்தையாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவரது வலது கால் ஊனமுற்றது. அதுமுதல் அவர் மாற்று திறனாளியாக இருக்கிறார். தம்முடைய மாற்று திறனாளி அடையாளத்தை பயன்படுத்தி பெண்களிடம் அவர் எளிதாக அணுக முடிந்திருக்கிறது. அவருக்கு உதவ வந்த பெண்களையே பாலியல் பலாத்காரம் செய்து அவர் கொன்றிருப்பதாக போலீசார் கூறினர்.
ஐந்து பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, லாரி ஒன்றை திருடி ஆயுதங்களை எடுத்து சென்றதாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2018-19ஆம் ஆண்டில் ராகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் 14ஆம் தேதிதான் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
இதையும் படிங்க: 'ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்'.. பத்திரிகையாளர் முகமது சுபைருக்கு கனிமொழி ஆதரவு குரல்!
ராகுல் குறித்து மேலும் பேசிய குஜராத் மாநிலம் வல்சாத் காவல் கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகேலா, "ராகுலை கைது செய்து விசாரணை செய்தபோது ஜோத்பூர் சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் இந்த கொலைகளை செய்திருப்பதாக கூறியுள்ளார். புனே-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெண்ணை கொன்றதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட பெண் குறித்து தகவல் ஏதும் தெரியவரவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்," என்றார்.
ரயில்களில் தனியாகப் பயணிக்கும் பெண்களை குறிவைத்தே ராகுல் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். நவம்பர் 14ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் உத்வாடா ரயில் நிலையம் அருகே 19 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணை கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஹவ்ரா அருகே கைதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு முதிய பெண்மணி, கர்நாடகாவில் ஒரு பயணி, யாதகிரிகுட்டா ரயில் நிலையம் அருகே தெலுங்கு பேசும் பெண்ணையும் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
குஜராத் மாநிலம் வல்சாத் போலீசார் விசாரணையில் ராகுல்தான் குற்றவாளி என்று தெரியவந்ததும், ரயில்வே போலீசார் உதவியுடன் அவர் தேடப்பட்டார். குஜராத் மாநிலம் வாபிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த ராகுலை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ராகுலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பத்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைகள் குறித்து மேல் விசாரணை செய்வதற்காக 2 துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்