ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையால் பரபரப்பு நிலவுகிறது. அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அஹ்லான் பகுதியை சுற்றிவளைத்து காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது அவர்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியை நெருங்கியதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது என்றனர். இந்த துப்பாக்கிச்சண்டையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, கதுவா மாவட்டத்தின் மல்ஹர், பானி மற்றும் சியோஜ்தர் ஆகிய இடங்களில் கடைசியாகக் காணப்பட்ட நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
மேலும் அவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சமீப காலமாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர் என்கவுன்ட்டர்கள் அரங்கேறி வருகின்றன. இதில் ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், "நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கையில் பயங்கரவாதிகளால் கண்மூடித்தனமான, மோசமான துப்பாக்கிச் சூடு காரணமாக இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் அதற்கு ராணுவம் பதிலடி கொடுப்பதும் அதிகரித்து வந்துள்ளது. சமீபத்தில் கூட, பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மரணம் அடைந்தனர்.
ஷேர் காலனி சோபோரில் பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது மர்மமான பொருள் வெடித்ததாக கூறப்பட்டது. அதற்கு முன்பு, குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகள் தட்டில் வைத்த முட்டையை எடுத்த அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்..! பெங்களூருவில் நடந்தது என்ன? - bengaluru anganwadi issue