கோழிகோடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோழிகோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14 வயது மாணவருக்கு வென்டிலேடர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், காலை 11.30 மணி அளவில் மாணவர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். காலை 10.50 மணி அளவில் மாணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் மலப்புரம் மாவட்டம் பண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரது ரத்த மாதிரிகள் புனே வைராலாஜி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில், சோதனை முடிவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
வென்டிலேடர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் மாணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோழிகோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதார ஆய்வாளர்கள் அவரை மாற்றினர். தொடர்ந்து அங்குள்ள தனி வார்டில் மாணவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 10ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும் பண்டிக்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையி சிகிச்சை பெற்ற போது நிபா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து பண்டிக்காடு பகுதியில் கடும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பண்டிக்காடு மற்றும் அனக்கயம் பகுதிகளில் மாணவருடன் தொடர்பில் இருந்த 246 பேர் கணக்கிடப்பட்டு அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மற்றொரு மாணவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது மழைக்கால கூட்டத் தொடர்! பட்ஜெட் தாக்கலில் சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்! - Parliament Monsoon session