64 ஆண்டுகளுக்குப் பிறகு கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் மயிலாடுதுறை: கொற்கை கிராமத்தில் ஶ்ரீ ஞானாம்பிகை உடனாகிய ஶ்ரீ வீரட்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இந்த ஆலயம் அஷ்ட விரட்டத் தளங்களில் ஒன்றாகவும் காவிரிக் கரையில் அமைந்துள்ள 274 பாடல் பெற்ற சிவாலயங்களில் 26வது ஆலயமாகவும் காணப்படுகிறது.
இறைவன் காமனை நெற்றி விழியால் எரித்த ஸ்தலம், இறைவன் அம்பிகையைப் பிரிந்து யோகம் செய்த இடமாக உள்ளதால் யோகி புரம் எனவும், காமனை எரித்த இடமாக உள்ளதால் காமதகனபுரம் எனவும், இலக்குமியின் நடுக்கத்தை போக்கியதால் கம்பகரபுரம் எனவும், தீர்க்கவாகு முனிவர், இறைவனின் அபிஷேகத்திற்காக கங்கை நீரை விரும்பி, தமது கைகளை நீட்ட கைகள் நீளாது குறுகியமையால் குறுக்கை எனவும் பல்வேறு பெயர்கள் அழைக்கப்படுகின்றன.
இறைவன் காமனை நெற்றி விழியால் எரித்த ஸ்தலம். மூர்த்தி ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருநேரிசையில் இரண்டு தேவார பதிகங்கள் புராண வரலாறுகளை விளக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
இப்படியாக பல்வேறு சிறப்புகளை உடைய இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவானது நேற்று (செப் 03) நடைபெற்றது. இந்த விழாவிற்கான யாகசாலை பூஜைகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி நடைபெற்று, ஐந்து கால பூஜையில் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து நேற்று (செப் 03) காலை 6ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், மங்கள வாத்தியங்களும், செண்டை மேளங்களும் முழங்க புனித கடங்கள் ஊர்வலமாகக் கோபுர கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிவனடியார்கள் தமிழ் பாசுர பதிகங்களைப் பாடினர். மேலும், தருமபுரம் ஆதீன 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீன மடாதிபதி, செங்கோல் ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:சத்தியமங்கலம் அருகே 1 கோடி சிவலிங்கம் கொண்ட கோயில்!