சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜக செயற்குழு கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவாரஜ் சிங் செளகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இக்கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக பாஜகவினர் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்று (புதன்கிழமை) பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு வெற்றியை, தேசிய ஜனநாயக கூட்டணி பெறுவதற்கான ஒரு பிள்ளையார் சுழி போடுவதற்காக இந்த சிறப்பு செயற்குழு கூட்டம் இருக்கும்.
அத்துடன் போதைப்பொருள் மற்றும் கள்ளாசாரய மரணங்களில் இருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ளன. நீட் தேர்வு பற்றி கருத்து சொல்லும் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும். எதற்காக நீட் வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் விஜயிடம் கேள்வி கேட்க வேண்டும்.
அதற்கு முன்பாத அவரிடம் நீட் தேர்வின் விரிவாக்கம் (NEET full form) என்ன என்பதை கேட்க வேண்டும். அதனை அவர் சரியாக கூறிய பிறகு, நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கான மூன்று காரணங்களை விஜய் கூற வேண்டும். இந்த கேள்விகளை எல்லாம் பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க வேண்டும்.
அவர் கூறும் பதில் இருந்து மக்கள் அவரை புரிந்து கொள்வார்கள். நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கத் தயாராக இருக்கும் மக்கள், ஏமாந்து அவர்கள் பின்னால் செல்ல தயாராக இல்லை. தமிழகத்திற்கு தேவையான நல்ல தலைவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். அவர்கள் தலைமையில் 2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமையப் போகிறது.
எனவே, நடிகர் விஜய் அவருக்கு முன்னால் அரசியலுக்கு வந்த நடிகர் உதயநிதி போல பேசாமல், நீட் தேர்வு குறித்த நோக்கத்தை ஆராய்ந்து, உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு பண்போடு பேச வேண்டும். இன்னும் அவர் அரசியலுக்கு முழுமையாக வரவில்லை வந்த பிறகு அவரிடம் இந்த கேள்விகளை எல்லாம் பத்திரிக்கையாளர்கள் கேட்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "ஜெயலலிதா புகைப்படம் அனைவருக்கும் தேவைப்படுகிறது" - சசிகலா பேச்சு!