திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்வை ஈடிவி பார்த் தமிழ்நாடு ஊடகம் சார்பில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "மேயர் சரவணன் தனது குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்றுக் கொண்டேன்.
கடிதம் கொடுத்தாலே ஏற்றுக் கொண்டதாக தான் அர்த்தம். தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தில் ராஜினாமா கடிதம் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, வரும் 8ஆம் தேதி கவுன்சில் கூட்டம் நடத்த இருக்கிறோம். மேலும், அடுத்த மேயர் யார் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்" என தெரிவித்தார்.
திருநெல்வேலி மேயர் ராஜினாமாவின் பின்னணி என்ன? திருநெல்வேலி மாநகராட்சியானது மொத்தம் 55 வார்டுகளைக் கொண்டது. இதில் 48 வார்டுகளில் திமுக கவுன்சிலர்களும், 4 வார்டுகளில் அதிமுகவும் மீதமுள்ள 3 வார்டுகளில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றது.
தனி மெஜாரிட்டியோடு இருந்ததால் வழக்கம் போல் அப்போது திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல் வகாப் எம்எல்ஏ தனக்கு வேண்டப்பட்ட நபரை மேயராக்க வேண்டும் என முடிவு செய்தார். வழக்கமாக, அதிமுக மற்றும் திமுக கட்சிகளில் இதுபோன்று உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளரின் பரிந்துரைபடியே நியமனப் பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்படும்.
அதன்படி, மாவட்டச் செயலாளர் என்ற அதிகாரம் இருந்ததால் எப்படியும், தான் கை காட்டும் நபரை கட்சித் தலைமை மேயராக அறிவிக்கும் என பெரும் கனவோடு இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 16வது வார்டு கவுன்சிலர் சரவணனை திமுக தலைமை மேயராக அறிவித்ததால் மாவட்டச் செயலாளர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத நபராக இருந்தவர் சரவணன். அப்துல் வகாப் ஆதரவோடு தான் கவுன்சிலர் ஆனார். இருந்தாலும் கூட அவரை மேயராக்க வேண்டும் என அப்துல் வகாப் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கட்சி தலைமை அறிவித்ததால் வேறு வழியில்லாமல் அமைதி காத்தார்.
தொடர்ந்து மேயர் சரவணனும் பதவி ஏற்றுக் கொண்டார். ஆனாலும், சரவணனை மேயராக ஏற்றுக்கொள்ள விரும்பாத அப்துல் வகாப் தொடர்ந்து அவருக்கு குடச்சல் கொடுக்கத் தொடங்கியதாக கூறப்பட்டது. குறிப்பாக, நான் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என வெளிப்படையாக அவரை மிரட்டியதாகவும் அப்போது பேசப்பட்டது.
ஒரு கட்டத்தில் அப்துல் வகாப்பின் பேச்சை மேயர் சரவணன் கேட்காததால் ஆத்திரமடைந்த அப்துல் வகாப், மாநகராட்சியில் உள்ள தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் மன்ற கூட்டங்களில் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தார். அதன்படி, அனைத்து மன்றக் கூட்டங்களிலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஆளுங்கட்சி மேயருக்கு எதிராக ஊழல் புகார் கூறுவது மேயரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு மூலம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமைச்சரின் பேச்சையும் கேட்காமல் திமுக கவுன்சிலர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது அப்துல் வகாப் தனது ஆதரவு கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற சம்பவமும் அரங்கேறியது. பின்னர், திமுக தலைமை கண்டித்ததன் பேரில், ஜனவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் தீர்மானம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, மேயர் சரவணனை திமுக தலைமை சென்னைக்கு அழைத்து கவுன்சிலர்களுடன் ஒத்துபோகும்படி பலமுறை அறிவுரை கூறியது. குறிப்பாக, கடந்த வெள்ளிக்கிழமை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்திலும் திமுக கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிகபட்சம் 10 கவுன்சிலர்கள் கூட மேயர் சரவணனால் தன் பக்கம் இழுக்க முடியவில்லை.
இது போன்ற நிலையில் தான் நேற்று முன்தினம் அவசர அவசரமாக சென்னைக்கு வரும்படி திமுக தலைமை மேயர் சரவணனை அழைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற மேயர் சரவணன் திமுக தலைமை உங்கள் பதவியை நீங்களே ராஜினாமா செய்து விடுங்கள் கூறியதாக தெரிகிறது. கட்சி தலைமை வலியுறுத்தியதால் வேறு வழி இல்லாமல் மேயர் சரவணன் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
உட்கட்சி பூசல்: மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் கடும் உள்கட்சி பூசல் இருப்பது வெட்ட வெளிச்சமானது. குறிப்பாக கடந்த ஆண்டு திமுக மூத்த அமைச்சரான துரைமுருகன் ஆய்வு பணியில் ஈடுபடுவதற்காக திருநெல்வேலி வரும் போது அமைச்சர் அருகில் மேயரை வர விடாமல் அப்துல்வகாப் பிரிவினர் தடுத்தனர்.
இதனால் கோபமடைந்த அமைச்சர் துரைமுருகன் மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல்வகாப்பை பொறுப்பில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் மாலைராஜா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மைதீன் கான் புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனவே மேயர் சரவணன் சற்று நிம்மதி அடைந்தார். இருந்தாலும், புதிய மாவட்டச் செயலாளர் மைதீன்கானுக்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், கட்சி தலைமை தரப்பிலும் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என கூறப்பட்டது.
ஏற்கனவே கடும் உட்கட்சி பூசல் நிலவி வருவதால் மூத்த நிர்வாகிக்கு பொறுப்பு வழங்கினால் தான் உட்கட்சி பூசல் வராது என்ற அடிப்படையில் மட்டும் தான் மைதீன்கானுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் மேயர் சரவணன் பிரச்னையைத் தீர்க்க மைதீன் கானால் முடியவில்லை. அதை உறுதி செய்யும் விதமாக தற்போது மாவட்டச் செயலாளரின் ஆதரவாக இருந்தும் கூட மேயர் சரவணன் அதிரடியாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மேயர் ராஜினாமா செய்யப்பட்டதை அறிந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் தரப்பினர் கடும் குஷியில் உள்ளனர்.
மேலும், மேயர் சரவணன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியில் அடுத்த மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சரவணனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால் மீண்டும் மேயராக நியமிக்கப்படும் நபரால் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதிலும் திமுக தலைமை உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்த் ராஜினாமா.. பின்னணியும் சர்ச்சைகளும்!