தமிழ்நாடு

tamil nadu

மருத்துவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என கோரிக்கை!

By

Published : Nov 17, 2022, 6:45 AM IST

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு இலக்கு நிர்ணயித்து அழுத்தம் தரக்கூடாது என அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என கோரிக்கை
மருத்துவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமிநாதன், மாநிலப் பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் கடந்த 11 ஆம் தேதி கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு கால் முழங்காலில் Arthroscopy அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மாணவிக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டவுடன் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அறுவை சிகிச்சை (Amputation) செய்யப்பட்டு உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது. மீண்டும் 14 ஆம் தேதி அன்று உடல்நிலை மோசமடைந்து இறந்திருப்பது வருத்தத்திற்குரியது. இளம் பெண்ணின் இ‌த்தகைய துயரமான சம்பவம் நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதுபோன்ற Arthroscopy அறுவை சிகிச்சைகள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போன்ற அனைத்து வசதிகளும் நிறைந்த பெரிய மையங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் சிறப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் Arthroscopy செய்வதற்கு வசதிகள் குறைவாக உள்ள மாவட்ட மற்றும் நகர்புற மருத்துவமனைகளில் எலும்பு முறிவு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சை செய்யாத மருத்துவர்களிடம் விளக்கமும் (Memo) பல இடங்களில் துறை உயரதிகாரிகளால் கேட்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிப்பது இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகிறது.

பெரியார் நகர் மருத்துவமனை போன்ற சிறிய மருத்துவமனையில் பணிச்சுமையும் அதிகம் இருக்கும். அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர்கள் எடுத்த நிலையில், பெரியார் நகர் மருத்துவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற தவறை செய்தது போல் பொதுவெளியில் சித்தரிப்பது வருங்காலத்தில் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற உயர்தர அறுவை சிகிச்சை செய்யும் எண்ணத்தை அழித்துவிடும்.

ஆதலால் துறைரீதியான முறையான, விரிவான விசாரணை மூலம் சுகாதார கட்டமைப்பில் தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும். மருத்துவர்களுக்கு இலக்கு கொடுத்து அழுத்தம் தரக்கூடாது, அதுவே இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க உதவும். இதுமட்டுமல்லாமல் செவிலியர்கள் பற்றாக்குறை, ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்கள் பற்றாக்குறை மருத்துவர்களுக்கான அதிக வேலை பளுவும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட காரணமாக அமைந்து விடக்கூடாது.

பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான சில கருவிகளுக்கு மருத்துவர்கள் தங்கள் சொந்த உபகரணங்களையே பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் மருத்துவத்துறை தேசிய அளவில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அதிநவீன சிகிச்சைகளை மேற்கொண்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இதுபோன்ற துயர சம்பவங்களால் வருங்காலங்களில் மருத்துவர்கள் சிகிச்சைகளில் ஏற்படும் ஒருசில சிக்கல்களை கண்டு அஞ்சி துணிந்து சிகிச்சை வழங்குவதில் தயங்கும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்... விடியல் எப்போது?

ABOUT THE AUTHOR

...view details