தமிழ்நாடு

tamil nadu

குற்றஞ்சாட்டப்பட்டவரின் பணியிட மாற்றம் களங்கம் என கருத முடியாது: உயர் நீதிமன்றம்

By

Published : Apr 12, 2021, 4:12 PM IST

சென்னை: குற்றஞ்சாட்டப்பட்டவரின் பணியிட மாற்றம் களங்கம் என கருத முடியாது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் மூத்த வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் என்பவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து வழக்கறிஞர்கள் வாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாட்சிகளை கலைக்க கூடும் என்ற அடிப்படையில், சீனிவாசனை சேலத்திலிருந்து திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ். வைத்தியாநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சாட்சிகளை கலைக்க கூடும் எனக் கூறுவது வெறும் யூகம், பணியிட மாற்றம் களங்கம் ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.

அதேபோல் அரசு தரப்பில், நிர்வாக அடிப்படையில் மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால் நிர்வாக அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யக்கூடாது எனக் கூறமுடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுக்கு ஆளானவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு பதிலாக பணியிட மாற்றம் செய்யலாம், அந்த நடவடிக்கையை களங்கமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டினார்.

மேலும் மனுதாரர் சீனிவாசனுக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்து மே மாத இறுதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க:கரோனா இரண்டாவது அலை: உச்ச நீதிமன்றத்தில் கட்டுப்பாடுகள்

ABOUT THE AUTHOR

...view details