கரோனா தொற்று தாக்குதல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம், ஜோசப் கல்லூரி, எஸ்.ஐ.டி கல்லூரி வளாகம், மதுரம் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகள் செயல்படுகின்றன.
இதற்கிடையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கே.கள்ளிக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த காய்கனி வணிக வளாகத்திற்கு காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி காந்தி மார்க்கெட் கே.கள்ளிக்குடி வணிக வளாகத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.
திருச்சி காந்தி மார்க்கெட் திறப்பு மனுவை விசாரித்த நீதிமன்றம் திருச்சி காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் ஏற்கனவே கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த காந்தி மார்க்கெட் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் காந்தி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று(நவ.26) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து காந்தி மார்க்கெட் திறப்பு விழா இன்று(நவ.27) காலை நடைபெற்றது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மார்க்கெட்டை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல்துறை ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, ஆவின் தலைவர் கார்த்திகேயன், அதிமுக மாநகர் மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை ஐயப்பன், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே காந்தி மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்கள், வியாபாரிகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பகுதி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதன் காரணமாக காந்தி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டு காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதனால் நீதிமன்ற உத்தரவுப்படி காந்தி மார்க்கெட் அதன் வளாகத்திற்கு உள்ளேயே செயல்பட வேண்டும். அதேசமயம் வளாகத்தை விட்டு வியாபாரிகள் வெளியே வந்து வியாபாரம் செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரித்தார். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் பூட்டப்பட்ட காந்தி மார்க்கெட், சுமார் 8 மாதங்களுக்கு பிறகு நவம்பர் இறுதியில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி மீன்பிடி துறுமுகம் - அமைச்சர் நேரில் ஆய்வு