தமிழ்நாடு

tamil nadu

சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு ரத்து விவகாரம்: வேளாண் பல்கலைக்கழகம் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

By

Published : Nov 28, 2020, 4:13 PM IST

மதுரை: கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்ததை, ரத்து செய்ய கோரிய மனு தொடர்பாக பல்கலைக்கழக முதல்வர், துணை வேந்தர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் அருண் சங்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நவம்பர் 30, டிசம்பர் 1ஆம் தேதி தொழில்முறைக்கல்வி பாடப்பிரிவுகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு ஆண்டுதோறும் ஒரு இடம் ஒதுக்கப்படுவது வழக்கம். அதற்கு, வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்ற அடிப்படையில் விண்ணப்பித்திருந்தேன். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இது இயற்கை நீதிக்கு எதிரானது. மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு புதிதாக ஒரு அரசாணை பிறப்பித்து சலுகைகளை நீக்க முடியாது. எனவே, நடப்பாண்டு இளங்கலை விவசாய பல்கலைக்கழக கலந்தாய்வில் சுதந்திர போராட்ட வாரிசுதாரர்கள் ஒதுக்கீட்டில் இடம் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (நவம்பர் 28) விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கலந்தாய்வு தொடங்கினால், அது தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கக் கூடாது என்பது விதி. நவம்பர் 30ஆம் தேதிக்குள் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக முதல்வர், துணை வேந்தர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்கவில்லை எனில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எச்சரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details