தமிழ்நாடு

tamil nadu

கேரள அரசின் ஐ.டி. செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை

By

Published : Sep 14, 2022, 11:05 PM IST

கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயல்பாடுகள் குறித்து அம்மாநில அலுவலர்களுடன் தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழு கேரள மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை செயல்பாடுகள் குறித்து இன்று (செப்.14) ஆலோசனை மேற்கொண்டனர்.

கேரள அரசின் பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்பவியலின் ஆளுகை மற்றும் இணையவழி சேவைகளின் பயன்பாடு போன்ற பல தகவல்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர். மேலும், அமைச்சர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள டெக்னோபார்க் தொழில்நுட்ப பூங்காவை (Technopark IT Park) பார்வையிட்டு, டெக்னோபார்க்கில் இருக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவை நிறுவனங்கள் (IT/ITeS) பற்றியும், ஆண்டொன்றுக்கு புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகள் பற்றியும் அலுவலர்களுடன் விரிவாக கலந்துரையாடினார்.

கேரள அரசு தகவல் தொழில்நுட்பத்தை எவ்வாறு மருத்துவம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படுத்துகிறது என்பது பற்றியும் மற்றும் கேரள அரசின் இணையவழி சேவைகள் பற்றியும் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் துறையின் புதுமையான முயற்சிகள் பற்றியும் கேரள அரசு உயர் அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, தலைமை செயல் அலுவலர் பிரவீன் பீ. நாயர், தமிழ்நாடு அரசு, தலைமை தொழில்நுட்ப அலுவலர் திரு. ராபர்ட் ரவி, தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹரிபாலச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:"நீங்கள் ஒருவரைத் தாக்கினால், நாங்கள் இருவரைத் தாக்குவோம்" - திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details