தமிழ்நாடு

tamil nadu

இந்தியப் பெண்கள் ஆயுதப் படையின் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்துவருகின்றனர் - ராஜ்நாத் சிங்

By

Published : Jan 14, 2023, 7:57 AM IST

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒருங்கிணைந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

லக்னோ:உலகின் மிக உயரமான போர்க்களப்பகுதியான சியாச்சினில் பணிபுரிவது முதல் போர்க்கப்பல்களில் பணியமர்த்தப்படுவது வரை, இந்தியப் பெண்கள் ஆயுதப் படையின் அனைத்துத் துறைகளிலும் தடைகளை உடைத்து சாதனை படைத்து வருகின்றனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒருங்கிணைந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நேற்று (ஜனவரி 13) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வெற்றி பெற்று வருகின்றனர். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை அரசு வழங்கிவருகிறது. அதேபோல அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் ஆயுதப் படையின் அனைத்துத் துறைகளிலும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட ராஜதந்திர செயல்பாடுகள் உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரித்தது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருப்பதற்கு மத்திய அரசின் உறுதிப்பாடே காரணம். நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள், மக்களுக்கு எளிதான வாழ்வை உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, 2022 டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடிக்கு மேல் நடந்துள்ளது. மருத்துவம், நிதித் தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிற துறைகளில் டிஜிட்டல் அம்சங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் நாட்டின் தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த வழிவகுக்கும். இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம்.

எந்தவித பாரபட்சமும் இன்றி மக்களுக்குச் சேவை செய்யுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அது எப்போதும் வெற்றிக்கு வழிவகுக்கும். வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இணைந்தவை.

தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதும் அவற்றை எதிர்கொண்டு மீள்வதும் முக்கியம். சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான நேர்மறையான அணுகுமுறையும் உறுதியும் தான் ஒருவரை சிறப்புறச் செய்கிறது. அறிவு அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும்போது அது விலைமதிப்பற்றதாக மாறும். சிறந்த தேசத்தைக் கட்டமைப்பதற்கும் உலகை மிகச் சிறந்த இடமாக மாற்றுவதற்கும் புதிய வழிகளை ஆராயுமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:MV Ganga Vilas cruise: ஒரு கப்பலில் இவ்வளவு வசதிகளா? மலைக்க வைக்கும் டிக்கெட் விலை

ABOUT THE AUTHOR

...view details