என்டிஆர்: ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கையாப்பேட்டை மண்டல் பகுதியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக நந்திகாமா துணை காவல் ஆணையர் பி ரவி கிரண் கூறுகையில், “தொழிற்சாலையின் மூன்றாவது தளத்தில் இருந்து சிமெண்ட் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மிகவும் சூடான பொருள் இரண்டாவது தளத்தில் பணி செய்து கொண்டிருந்த சிலர் மீது விழுந்துள்ளது. எதுவும் வெடிக்கவில்லை. ஆனால், நிறைய பொருட்கள் மூன்றாவது தளத்தில் இருந்து இரண்டாவது தளத்தில் விழுந்துள்ளது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், சிமெண்ட் தொழிற்சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்துக்கு காரணமான நபர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு தொழிற்சாலை தரப்பிலும், அரசுத் தரப்பிலும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜார்கண்டில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 3 பேர் பலி! தொடரும் மீட்பு பணி!