தஞ்சாவூர்: ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும், பல்வேறு தன்னார்வலர் அமைப்புகளும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதமும், அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
ஹெல்மெட் அணிந்து வந்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. தஞ்சை தனியார் தொண்டு நிறுவனம் அசத்தல்!
Published : Jun 28, 2024, 1:09 PM IST
இந்த நிலையில், தஞ்சாவூரில் ஜோதி தொண்டு நிறுவனம் சார்பில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, தஞ்சை அண்ணா சாலை பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூப்பன் இலவசமாக வழங்கினர். மேலும், இதேபோல் தினமும் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார் தெரிவித்தார்.