சென்னை: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 29வது நினைவு நாளையொட்டி சென்னை தி. நகரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானதுதான்.
மத்திய அரசுக்கு என்று ஏதாவது தனி நிதி உள்ளதா? மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதி. மத்திய அரசின் நிதி வருவாயை பெருக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. பேரிடர் காலத்தில் நிதியை சரியாக வழங்காமல், புதிய கல்விக் கொள்கைக்கு கையெழுத்திட்டாதால் கல்வித்துறைக்கு உரிய நிதியை தருவேன் என்று கூறுவது எல்லாம் ஏற்க முடியாது.
ஜி.எஸ்.டி, நீட் தேர்வு ரத்து, இந்தி மொழியை திணிப்பதை எல்லாம் மற்ற மாநிலங்கள் எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்தது தமிழகம். அதேப்போல மதுக்கடைகளை மற்ற மாநிலங்கள் மூடுவதற்கு முன்பாக நாம் மூட வேண்டும். குஜராத் மதுவிலக்கை அமல்படுத்தும் போது மற்ற மாநிலங்கள் அமல்படுத்தினால் தான் நாங்கள் அமல்படுத்துவோம் என்று கூறவில்லையே.
இதையும் படிங்க: “60 ஆண்டுகளில் செய்யாததை 9 ஆண்டுகளில் செய்தவர் காமராசர்”- சீமான் புகழாரம்
மதுக்கடைகளை முதலில் திறந்தது யார்? தமிழக அரசு தானே. மாநில உரிமைகள் பேசும் திமுக, பூரண மதுவிலக்கை அமல்படுத்த சொன்னால் மட்டும் ஏன் மத்திய அரசை கைக்காட்டுகிறீர்கள்? சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு உரிமை இல்லையா?
குஜராத் மாநிலம் 56,000 கோடிக்கு பால் விற்பனை செய்யும் போது , தமிழகம் 54000 கோடிக்கு மது விற்பனை செய்து வருகிறோம். நமக்கு நாமே நடைபயணத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக்கை மூடுவோம் என்று கூறினார். அவர் கூறி எத்தனை காந்தி ஜெயந்தி கடந்து விட்டது.
பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா செய்கிறார். இது தான் உங்கள சமூகநீதியா? கட்சி பெயரை பயன்படுத்தி 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். அமைச்சரவை மாற்றத்தை நான் பெரிதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை, தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளனர்.
அமைச்சர் ராஜ கண்ணப்பனை மூன்று முறை துறை மாற்றம் செய்துள்ளனர். ஒரு துறையின் மீது முழுமையாக எப்படி கவனம் செலுத்த முடியும். சனாதானத்தை உங்கள் வீட்டில் வைத்து கொண்டு சனாதனத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லக்கூடாது.
கருணாநிதியின் மகன் என்ற பேரை விட முதலமைச்சர் ஆவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது. கருணாநிதியின் பேரன் மு.க.ஸ்டாலின் மகன் என்ற தகுதியை தாண்டி துணை முதலமைச்சராக உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது. இது தான் உலகத்திலேயே கொடிய சனாதனம்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்