குன்னூர் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா.. வனத்துறையினர் எச்சரிக்கை! - காட்டு யானை
Published : Mar 2, 2024, 7:29 PM IST
நீலகிரி: கோடைக் காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில், சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடிக் காட்டு யானைகள் குன்னூர் மலைப்பாதைக்கு வருகின்றன.
இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 12 மற்றும் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே, இரண்டு ஆண் காட்டு யானைகள் சாலையோரம் உலா வருகிறது. இது தொடர்பாக, குன்னூர் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் பேரில், வனத்துறையினர் காட்டு யானைகள் சாலைக்கு வராதபடி கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பர்லியார், குறும்பாடி, கோழிக்கரை, சின்ன குரும்பாடி போன்ற பழங்குடியினர் கிராமத்தில் உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், யானைகளைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் முக்கிய தேவைகள் இன்றி வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், யானைகளைக் கண்டால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி, அருகில் சென்று புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.