முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு..! வைரலாகும் சிசிடிவி காட்சி - தேனி மாவட்ட செய்திகள்
Published : Jan 29, 2024, 11:56 AM IST
தேனி: பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனபால் - ஜெகதீஸ்வரி(43) தம்பதியினர். ஜெகதீஸ்வரி எல்.ஐ.சி. முகவராக உள்ளார். இந்நிலையில், இருவரும் நேற்று முன்தினம் (ஜன.27) மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், வீட்டில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய 10 பவுன் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெகதீஸ்வரி பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் அடிப்படையில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், சம்பவத்தன்று மதியம் 1:40 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர், அவர்களது வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்தது பதிவாகியுள்ளது.
மேலும், பழனிசெட்டிபட்டி பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அப்பகுதியில் நடக்கும் தொடர் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தங்களது பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க வேண்டுமென அப்பகுதியினர் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.