இனிப்புகளால் உருவான அய்யோத்தி ராமர்... கோவை பக்தரின் சுவாரஸ்ய சமர்ப்பணம்!
Published : Jan 21, 2024, 11:21 AM IST
கோயம்புத்தூர்: உத்தர பிரதேசம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நாளை (ஜன.22) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் உட்பட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே, ராமர் கோயிலின் திறப்பு விழாவையொட்டி, ராமருக்கு சமர்ப்பிக்கும் விதமாக அவரவர்களின் திறமை மூலம் ராமருக்கு சமர்ப்பணம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கோவையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான UMT ராஜா, அயோத்தி ராமருக்கு பிரசாதங்களாக படைக்கப்படும் இனிப்பு வகைகளான பூந்தி, கேசரி, அவல், எள் உருண்டை ஆகியவற்றைக் கொண்டு ராமரின் உருவத்தை ஓவியமாக வடிவமைத்து உள்ளார்.
தற்போது, அவர் இனிப்பு வகைகளைக் கொண்டு ராமரின் உருவத்தை வடிவமைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் பேசும் போது, "அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக, ராமருக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளைக் கொண்டு, ராமரின் திருவுருவத்தை வடிவமைப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது" எனக் கூறினார்.