இறந்த பின்னும் நிம்மதி இல்லை.. தண்ணீரில் நீச்சல் அடித்து மயானத்திற்குச் செல்ல வேண்டிய அவலநிலை! - Poraiyur village
Published : Jan 26, 2024, 4:29 PM IST
செங்கல்பட்டு: செய்யூர் அருகே பொறையூர் கிராமத்தில் முறையான பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த பொறையூர் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களில் சுமார் 1300 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இறப்பு நிகழ்ந்தால், இறந்தவர்களை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது மிகச் சிரமமாக உள்ளதாகவும் இது குறித்து நீண்ட காலமாக அச்சமூகத்தினர் பல முறை கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் குடியிருப்புக்கு அருகிலேயே சித்தேரி என்ற ஏரி உள்ளது. மேலும், மயானத்திற்குச் செல்ல முறையான பாதை வசதியும் இல்லை. சாதாரண நாட்களிலேயே முழங்கால் அளவு நீர் தேங்கியிருக்கும் இப்பகுதியில், மழைக்காலங்களில் இடுப்பு உயரத்தைத் தாண்டி நீர் தேங்கியுள்ளது. மயானத்திற்குச் செல்லும் வழியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் இறந்தவர்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது ஏறக்குறைய நீச்சல் அடித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் சரியான பாதை வசதி அமைத்துத் தர வேண்டி, அனைத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே, பொறையூர் கிராமத்திற்கு மயான பாதை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.