"நம்ம பிரண்ட் தான், ஒன்னும் பண்ணாது"..! யானைக்கு டாட்டா காட்டி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..! - சத்தியமங்கலம்
Published : Feb 14, 2024, 11:13 AM IST
|Updated : Feb 15, 2024, 7:06 AM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. மேலும் அவ்வழியே வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் காத்திருக்கின்றன.
இந்த நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, தமிழக, கர்நாடகா எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே நடமாடியது. இதையடுத்து அவ்வழியே சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், யானை நடமாட்டத்தைக் கண்டு வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர்.
அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றைக் காட்டுயானை, பேருந்தில் முன் பகுதியை நோக்கி வந்தது. இதையடுத்து, ஒற்றைக் யானையைக் கண்டு பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதனால் பேருந்தை ஓட்டுநர் பின்னோக்கி இயக்கினார்.
அப்போது காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடி அருகே வந்த போது, 'ஒன்னும் பண்ண மாட்டான் நம்ம பிரண்ட் தான்' எனக் கூறிய ஓட்டுநர், யானைக்கு டாட்டா காட்டிவிட்டு அசால்டாக பேருந்தை இயக்கினார். இந்தக் காட்சியைப் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.