சித்தர் கோயிலில் சிறப்பு பூஜை செய்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்! - KATHIR ANAND - KATHIR ANAND
Published : May 15, 2024, 3:42 PM IST
திருப்பத்தூர்: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் சிட்டிங் எம்பியான கதிர் ஆனந்த், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம், அதிமுக சார்பாக பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி, ஆம்பூர் அடுத்த பாட்டூர் பகுதியில் உள்ள மஹா சித்தர் தாத்தா சுவாமிகள் அருளிய பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் திருக்கோவிலில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜியன் மற்றும் மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் திமுகவினர் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.