பழனியில் துவங்கியது வைகாசி விசாக திருவிழா! தேரோட்டம் எப்போது? - Vaikasi Visakam Festival - VAIKASI VISAKAM FESTIVAL
Published : May 16, 2024, 12:37 PM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (மே.16) காலை பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜையுடன் தொடங்கியது.
இதனையடுத்து காலை கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவான 21ஆம் தேதி மாலை அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி, தெயாவானை திருக்கல்யாணமும், தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.
7ஆம் நாளான 22 ஆம் தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.
வருகின்ற 25 ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் லட்சுமி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.