"ஆன்லைன் வர்த்தகம் எங்கள் வாழ்க்கையைப் பறிக்கிறது" - விக்கிரமராஜா வேதனை..! - mk stalin
Published : Jan 29, 2024, 2:30 PM IST
|Updated : Jan 29, 2024, 2:39 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மற்றும் ஆம்பூர் அனைத்து வணிகர் சங்கம் சார்பில், பொங்கல் விழா மற்றும் மத நல்லிணக்க விழா (ஜன.28) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா,"தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்போடு, ஆம்பூர் அனைத்து வணிகர் சங்கம் இணைக்கப்பட்டு, அற்புதமாகப் பொங்கல் விழா மற்றும் மத நல்லிணக்க விழாவை உயிரோட்டமாக நடத்தியுள்ளனர். இது ஜனநாயக நாடு, வணிகர்களை மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும், யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு உதாரணம் இந்த மதநல்லிணக்க கூட்டம்.
அதே வேளையில், நாடு தழுவிய அளவில் ஆன்லைன் வணிகம் எங்கள் வாழ்வைப் பறித்துக் கொண்டிருக்கின்றது. வணிகத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதனை ஆட்சியாளர்கள் சட்டமாக நிறைவேற்ற வேண்டும். வருகின்ற 41ஆவது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு என்பது பெரும் முழக்க மாநாடாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், ஆம்பூர் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து வணிகர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைக்கப்படும். அதனைத் தவிர்க்கும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கம் நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று இருக்கிறார். அதன் நோக்கம் அங்குள்ள பொருளாதாரத்தைத் திரட்டி நமது மாநிலத்தை வளம்படுத்த வேண்டும் எனச் சென்று இருக்கிறார். அதற்குத் தமிழ்நாடு வணிகர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது" எனத் தெரிவித்தார்.