சுல்லுன்னு அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு குளியல்! கும்பக்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - kumbakarai falls - KUMBAKARAI FALLS
Published : Jun 23, 2024, 6:54 PM IST
தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக வட்டக்கானல், வெள்ளகெவி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக, கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
கோடை காலம் முடிவடைந்த பிறகும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்று வெப்பத்தை தணிப்பதற்காக பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் உள்ளூர் காரர்கள் என கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக மக்கள் தங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வர தொடங்கினர்.
கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைந்து தங்களது விடுமுறை நாளை இனிமையாக கழித்து வருகின்றனர். முன்னதாக, கோடை காலம் என்பதால் அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் முற்றிலும் மழை இல்லாத காரணத்தால், அருவிக்கு நீர்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.