தேனி சுருளி அருவியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை! - Bathing Prohibited In Suruli Falls
Published : Jul 1, 2024, 2:18 PM IST
தேனி: தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே 'சுருளி அருவி' அமைந்துள்ளது. ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்கக்கூடிய இந்த அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த சுருளி அருவியை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த நிலையில், இன்று (ஜூலை 01) சுருளி அருவிக்கு நீர் வரத்து சீராக வந்து கொண்டிருக்கும் நிலையில் அருவி பகுதிக்குச் செல்லும் வன சாலையில் குட்டிகளுடன் கூடிய யானைகள் முகாமிட்டு அந்தப் பகுதியில் உலா வந்து கொண்டிருப்பதாக வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இதனால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், யானைகள் அப்பகுதில் இருந்து கடந்து சென்ற பின்பு தான் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.