ஐப்பசி மாத பிரதோஷம்..அண்ணாமலையார் கோயில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!
Published : Nov 14, 2024, 7:34 AM IST
திருவண்ணாமலை: ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களுக்கு முன்பு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நேற்று ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு, அரிசி மாவு, மஞ்சள் தூள், சீயக்காய் தூள், சர்க்கரை, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பல்வேறு விதமான வண்ண வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.