புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி: தஞ்சையில் கோலாகலம்! - Thanjavur News in Tamil
Published : Jan 28, 2024, 4:32 PM IST
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் ஆண்டுதோறும் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 28) விறுவிறுப்பாக நடைபெற்றது.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதில் தஞ்சை, புதுக்கோட்டை , அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். பத்து சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைக்கும், சீறிப் பாய்ந்த காளையை பிடித்த மாடுபிடி வீரருக்கும் பித்தளை குவளை, சில்வர் குடம், ஸ்டவ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இது மட்டும் அல்லாது, சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியை காண சுற்றுவட்டாரங்களில் இருந்து அலைகடலாய் மக்கள் திரண்டு வந்தனர்.