தைப்பூச திருவிழா.. பழனியில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்! - Murugan
Published : Jan 25, 2024, 7:57 AM IST
திண்டுக்கல்: தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.25) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நேற்று மாலை நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜனவரி 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை, சமேதர் முத்துக்குமார சுவாமி வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.
அந்தவகையில், 6ஆம் நாளான நேற்று வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகமும், உபச்சாரமும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 28ஆம் தேதி தெப்பத்தேர் உலா மற்றும் கொடி இறக்கம் நடைபெறுகிறது. தைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.