புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தேனி சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - Theni LAW COLLEGE STUDENTS PROTEST - THENI LAW COLLEGE STUDENTS PROTEST
Published : Jul 16, 2024, 5:31 PM IST
தேனி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து இன்று (செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசால் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த 3 சட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மற்றும் வீரபாண்டி பேரூராட்சிகளின் சேர்மன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்தில் ஈடுபட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.