திண்டுக்கல்லில் மலை கிராமமே வியக்கும் வகையில் தாய்மாமன் சீர் வரிசை..! - dindigul
Published : Feb 26, 2024, 2:14 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது, கே.சி.பட்டி கிராமம். இங்கு வசிக்கும் தொழிலதிபர் ஏ.சி.ஐயப்பன் என்பவர் அவரது மகள் தீபா அக்சயாவுக்கு நேற்று(பிப்.25) பூப்புனித நீராட்டு விழா நடத்தினர். இந்த விழாவிற்கான மேடை அவரது வீட்டின் அருகில் உள்ள இடத்தில் பந்தலிட்டு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விழாவில் முக்கிய பங்காக தாய்மாமன்மார்கள் 3 பேர், சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தனது மருமகளான தீபா அக்சயாவை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தனர்.
மேலும், தாய்மாமன் சீர் வரிசையாக வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்டவைகளும் அனைத்து வகையான மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என 233 வகை தட்டுகளை தலைகளில் சுமந்து கொண்டு செண்டை மேளதாளம் முழங்க, கேரளா பாரம்பரிய நடனம் என மலைக்கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் தாய்மாமன் சீர்வரிசைக் கொண்டு வந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், மலைக்கிராம மக்கள் தங்களது பகுதியில் சேகரிக்கப்பட்ட வாழை, தேன், காய்கறிகள் உள்ளிட்டப் பொருட்களையும் சீர்வரிசையாகக் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.