வேடந்தாங்கல் சுப்பிரமணி சுவாமி கோயிலில் தை கிருத்திகை கோலாகலம்..!
Published : Jan 21, 2024, 7:24 AM IST
ராணிப்பேட்டை: நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோயிலில், தை மாதம் கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு கோயிலின் உற்சவமூர்த்திக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது, பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த சுவாமிக்கு, சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாலையில், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்லக்கில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு அருள் புரிந்தார். பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த கிருத்திகை திருவிழாவில் பானாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் என 30க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், விழாவை முன்னிட்டு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.