காலி பாட்டில்களை திரும்ப பெறுவதால் உயிருக்கே ஆபத்து - டாஸ்மாக் ஊழியர்கள் கூறுவது என்ன? - தேனி செய்திகள்
Published : Feb 5, 2024, 6:29 PM IST
தேனி: மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் சென்று ஆங்காங்கே வீசி விடுவதால், மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகளில் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் காலி மது பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் வாங்கி வைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக, இதனை எதிர்த்து தேனி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை இன்று (பிப். 5) அளித்தனர். தேனி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பாக மோகன் கூறுகையில், "டாஸ்மாக்கில் போதிய ஊழியர்கள் இல்லாததால் காலி மது பாட்டில்களை வாங்கும் பணியை மேற்கொண்டால் மது விற்பனை பாதிக்கிறது.
ஊழியர் மற்றும் இடம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் கூடுதல் ஊழியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும். காலி பாட்டில்களை வாங்குவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தாக இருக்கிறது. எனவே டாஸ்மாக் நிறுவனம் இந்த திட்டம் குறித்து உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.