திருமணமாகாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய நந்தி பகவான்! - Avani month Sani Pradosham - AVANI MONTH SANI PRADOSHAM
Published : Aug 18, 2024, 9:38 AM IST
திருவண்ணாமலை: மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷத்தன்று உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று அண்ணாமலையார் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் போது நந்தி பகவானை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.