900 கிலோ காரை இழுத்து சிறுவன் சாதனை! சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்!
Published : Jan 29, 2024, 5:21 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரௌத்திரம் தற்காப்பு கலைகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவன் தேவசுகன் (வயது 7). இந்நிலையில், தேவசுகன் சுமார் 900 கிலோ எடையுள்ள நான்கு சக்கர வாகனத்தை, 2.47 நிமிடத்தில் 220 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலை 10 மணி அளவில், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அமைந்துள்ள ஆழியார் அறிவுத் திருக்கோயில் அருகே நடைபெற்ற நிகழ்வில் கூடியிருந்த பொது மக்கள், சிறுவனை கைதட்டி ஊக்கப்படுத்தினர். குறிப்பாக, 7 வயது சிறுவன் தன உடல் எடையை விட பண் மடங்கு எடை அதிகம் கொண்ட நான்கு சக்கர வாகனத்தை மிக எளிமையாக இழுத்துச் சென்றது மக்களை திகைப்பில் ஆழ்த்தியது.
சிறுவன் தேவசுகனின் சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் சாதனை படைத்த சிறுவனுக்கு, உலக சாதனை படைத்தற்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் நிறுவனத்தின் தரப்பில் வழங்கப்பட்டன. 7 வயது சிறுவனின் இந்த சாதனை அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.