தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருப்பத்தூரில் குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்! - people protest for water

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 3:45 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த புலிகுட்டை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், இது குறித்து பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்து, இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், திருப்பத்தூர் - சேலம் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் இவ்வழியாக செல்லும் கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் நீண்ட நேரம் சாலையில் காத்துக் கிடந்தன. இதனால் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டமானது கைவிடப்பட்டது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, கடந்த 6 மாதங்களாக எங்களுக்குச் சரிவர தண்ணீர் கிடைப்பதில்லை. இது குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலக்கழித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். இதே நிலையில் தொடர்ந்தால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details