ஆடிப்பூர பிரம்மோற்சவம்: விமர்சையாக நடந்த பராசக்தி அம்மனின் வளைகாப்பு விழா! - Tiruvannamalai Annamalaiyar Temple - TIRUVANNAMALAI ANNAMALAIYAR TEMPLE
Published : Aug 8, 2024, 1:16 PM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 29ஆம் தேதி காலை உண்ணாமலை அம்மன் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக பராசக்தி அம்மன் காலையும், மாலையும் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தற்போது ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகக் கருதப்படக்கூடிய பராசக்தி அம்மன் வளைகாப்பு விழா, அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள வளைகாப்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வளைகாப்பு விழாவில் வளையல், குங்குமம், மஞ்சள், தாலிக் கயிறு போன்ற மங்கள பொருட்களை சிவாச்சாரியார்கள் அம்மனுக்குச் சாற்றினர்.
முன்னதாக, பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க அரிசி மாவு, மஞ்சள் தூள், சீகாய், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் மற்றும் சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும், பராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையலைப் பெற்று வழிபாடு செய்தனர்.