சித்திரை திருவிழா தேரோட்டம்; தஞ்சை பெரிய கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி! - தஞ்சை கோயில் சித்திரை திருவிழா
Published : Feb 8, 2024, 1:39 PM IST
|Updated : Feb 10, 2024, 2:31 PM IST
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 18 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு அலங்காரங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, ஏப்ரல் 20ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இவ்விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி, பந்தக்காலுக்கு சிவாச்சாரியார்களால் திரவியப் பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.