சூலூரில் படுகள திருவிழா.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம் - PADUKALAM THIRUVIZHA - PADUKALAM THIRUVIZHA
Published : May 12, 2024, 12:27 PM IST
கோயம்புத்தூர்: சூலூர் அடுத்த காடம்பாடி கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அண்ணன்மார் மற்றும் தங்காத்தாள் திருக்கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பிரசித்தி பெற்ற 'படுகள திருவிழா' கோயில் சீரமைப்பு பணிகளால் கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.
அண்மையில் அண்ணன்மார் கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இக் கோயிலின் குடமுழுக்கு விமர்சையாக நடத்தப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் இணைந்து படுகளப் பெருவிழாவை நடத்த முடிவெடுத்தனர். அதன்படி படுகளப் பெருவிழா, கடந்த 10ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இரண்டாம் நாளான நேற்று (மே 11) தங்காத்தாள் மற்றும் பெரியகாண்டியம்மன் வாணவேடிக்கையுடன் அண்ணன்மார் கோயிலுக்கு புறப்படுதல், அம்மை அழைத்தல், அண்ணன்மார் சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து பெரியண்ணசாமி வேடர்பரி மற்றும் கிளி வேட்டைக்கு புறப்படுதல், கட்டுச்சோறு கட்டுதல் மற்றும் படுகளப் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. பெரியண்ணசாமி குதிரை வாகனத்தில் உலா வந்தபோது ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் அருள் வந்து ஆங்காங்கே படுகளம் விழுந்தனர்.
படுகளம் விழுந்த பக்தர்கள் கோயில் முன்பு படுகளப்பட்டியில் கிடத்தப்பட்டனர். தொடர்ந்து உடுக்கை பாடலுடன் படுகளப் பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் மீண்டும் எழுப்பப்பட்டனர். இந்த படுகளப் பெருவிழாவில் காடம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.