34 ஆண்டுகளாக கொலு.. வீடு முழுவதும் 2,500 சிலைகளை வாங்கி அடுக்கிய விநாயகர் பக்தை.. மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி சம்பவம்! - NAVARATRI GOLU IN MAYILADUTHURAI
Published : Oct 12, 2024, 12:55 PM IST
மயிலாடுதுறை: நாடு முழுவதும் கடந்த அக்.3ஆம் தேதி துவங்கிய நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகரைச் சேர்ந்தவர் ராஜி பாஸ்கரன்.
இவர் கடந்த 34 வருடங்களாக தனது வீட்டில் கொலு கண்காட்சி வைத்து வழிபட்டு வருகிறார். நவராத்திரியின் 9 நாட்களை குறிக்கும் வகையில் 9 படிகளை அமைத்து, அதில் பல்வேறு கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தியுள்ளார். சிறப்பம்சமாகத் தனது வீடு முழுவதும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவ பொம்மைகளால் அலங்கரித்துள்ளார் இந்த விநாயகர் பக்தை.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விநாயகர் மீது கொண்ட அதீத ஆர்வத்தால், ஊருக்கு, கோயிலுக்கு என எங்கே சென்றாலும், விநாயகர் உருவ பொம்மைகளை வாங்குவது வழக்கம். மேலும், உறவினர்களும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றாலும் அன்பளிப்பாக விநாயகர் சிலைகளை தந்துவிட்டு போகிறார்கள். இவ்வாறு ஒரு அங்குலம் முதல் ஒரு அடிவரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவச்சிலைகள் சேகரித்து வீட்டை அலங்கரித்துள்ளோம்.
அதில், பள்ளிகொண்ட பெருமாள், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகள் உள்ளது. மேலும், தனது கைகளாலேயே விநாயகர் சிலைகளையும் செய்துள்ளேன். இந்த கொலுவைப் பார்க்க யார் வேண்டுமானாலும் வராலாம்" எனத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, வீடு முழுவதும் விநாயகர் சிலைகளால் அலங்கரித்த ராஜி பாஸ்கரன் விநாயகர் மீது தான் கொண்ட பக்தியை தனது கையில் பச்சை குத்தியும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த கொலு கண்காட்சியை அப்பகுதி மக்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.