குடியரசு தின விழா: தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து நெல்லை காந்திமதி யானை! - Etvbharat tamil
Published : Jan 26, 2024, 2:06 PM IST
திருநெல்வேலி: நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (ஜன.26) மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரபல கோயில்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு இன்றளவும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோயில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், யானை காந்திமதி முன் செல்ல, கோயில் ஊழியர்களால் தேசிய கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கொடிக்கம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் செயல் அதிகாரி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார். அப்போது கோயில் யானை காந்திமதி, மூன்று முறை துதிக்கையை தூக்கி, பிளிறி தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தது. அதே வேளையில் கோயில் ஊழியர்களும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தேசியக்கொடிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சில நாட்களுக்கு முன் காந்திமதி யானை மவுத் ஆர்கான் வாசித்து அனைவரது மனத்திலும் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.