மேய்ச்சலுக்காக நின்ற மூதாட்டி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - tirunelveli car accident - TIRUNELVELI CAR ACCIDENT
Published : Jul 9, 2024, 2:52 PM IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி கோமு. இவர் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்காக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது, அப்பகுதி வழியாக கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி கோமுவின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இச்சம்பவத்தைக் கண்ட அப்பகுதியில் உள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த மூதாட்டி கார் இடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.