நீலகிரி சுற்றுலாத்தலங்களில் கடும் மேகமூட்டம்.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் - Nilgiris Snow
Published : May 17, 2024, 4:25 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடும் மேகமூட்டத்தால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான மேகமூட்டம் நிலவி வருவதால், எங்கு பார்த்தாலும் வெண்மையான மேகம் சூழ்ந்த பகுதியாக திகழ்கிறது.
இதனால் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், வளைவுகளில் உள்ள பள்ளங்களைப் பார்க்க முடியாமலும் சுற்றுலாப் பயணிகளும், வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்கின்றனர்.
மேலும், மேக மூட்டத்தில் பனித் துளிகள் சாரலாக பெய்து வருகிறது. குறிப்பாக, குன்னூரில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் டால்ஃபின் நோஸ், லேம்ஸ்ராக் போன்ற பகுதிகள் மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.