7 வருடத்திற்கு ஒருமுறை அருள்வாக்கு சொல்லும் கருப்பணசாமி.. நிலக்கோட்டையில் திரளான பக்தர்கள் தரிசனம்! - Chellayi Amman Temple
Published : May 24, 2024, 4:10 PM IST
திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே பங்களாபட்டி கிராமத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவில் அரிவாளில் ஏறி நின்று ஆடி அருள்வாக்கு கூறிய கருப்பணசாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பங்களாப்பட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் செல்லாயி அம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு தொடங்கிய விழாவில் வாணவேடிக்கைகள், மேளதாளத்துடன் அம்மன் பூங்கரகம் அழைத்து ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் கும்மி அடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர், சிறப்பு நிகழ்ச்சியாக பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியுடன் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பணசாமி வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருப்பணசாமி அரிவாளில் ஏறி ஆடியும், சாட்டையால் அடித்தும் அருள்வாக்கு கூறி பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, மூணாறு ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.