கோவையில் நடைபெற்ற இரவு நேர மாரத்தான் போட்டி.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு! - coimbatore marathon competition
Published : Feb 19, 2024, 12:31 PM IST
கோயம்புத்தூர்: கோவை வ.உ.சி மைதானத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் விதமாகவும், புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களை மீட்கும் விதமாகவும், பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜெம் மருத்துவமனை மற்றும் ஜெம் பவுண்டேசன் சார்பாக நேற்று (பிப்.18) நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நடைபெற்ற இந்த மாரத்தான், இந்தியா அளவில் கோவையில் மட்டும்தான் நடைபெறுவதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் பெண்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்றதாகவும், ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரவீன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாரத்தான் போட்டியில் வரும் வருவாய்கள், முழுவதுமாக புற்று நோய் சிகிச்சைக்காக செலவு செய்யப்படும் எனவும் கடந்த ஆண்டு 100 நபர்களுக்கு இலவசமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். முன்னதாக புற்றுநோய் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சில உடற்பயிற்சிகளும் வழங்கப்பட்டன.