நெல்லை ஆனித்தேரோட்டம்; தேரை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்! - Nellai Aani Therottam - NELLAI AANI THEROTTAM
Published : Jun 9, 2024, 6:30 PM IST
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடைபெறும். இத்திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஆனி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழாவாகும்.
இந்த தேரோட்டத்தின் போது, கோயில் ரத வீதிகளில் 5 தேர்களும் வலம் வரும். சுமார் 450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் 90 அடி உயரம் கொண்டது. முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இந்த தேர் இழுக்கப்படும். இந்த திருத்தேரோட்டத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
அந்த வகையில், இத்திருவிழாவானது வரும் ஜூன் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், பேட்டை தீயணைப்புத் துறையினர் சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் குடவரை வாயில் மண்டபத்தில் அமைந்துள்ள மரச் சிற்பங்கள், சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய திருத்தேர்களை தீயணைப்புத் துறை வாகனத்தின் மூலம் சுமார் 13,500 லிட்டர் தண்ணீர் கொண்டு நவீன மோட்டார்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.