மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில்..மகா சிவராத்திரி முன்னிட்டு 18-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி! - Mayuranathar temple
Published : Mar 8, 2024, 7:48 AM IST
மயிலாடுதுறை: பார்வதி தேவியின் தந்தை தட்சன் மயிலாடுதுறை அடுத்துள்ள பரசலூரின் நடத்திய யாகத்துக்கு, சிவபெருமானை அழைக்காமல் அவமதித்ததால், பார்வதி தனது உருவத்தைவிட்டு மயில் உரு கொண்டு சிவனை பூஜித்ததாக புராணங்களில் கூறுகின்றன. பார்வதி மயில் உருவம் கொண்டு ஆடிய தலம் என்பதால் இவ்வூர் 'மயிலாடுதுறை' என வழங்கப்பெறுகிறது.
இந்த மயிலாடுதுறை மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது, புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி நாட்டியாஞ்சலி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு 18- ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நேற்று (மார்ச் 7) நேற்று தொடங்கியது.
நான்கு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்விழாவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டியக்கலைஞர்கள், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இதன் முதல் நாள் விழாவை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் கவிதாராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுத் தொடக்கி வைத்தனர். இதில் நாட்டிய கலைஞர்கள் நிகழ்த்திய பரதநாட்டிய நிகழ்வை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.